CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, January 4, 2010

பிரிவெழுத பிரியமில்லை...

கனவுகள் சுமந்த
கவிதைகளால்
காகிதம் நிரப்பியிருந்தேன்....
மைப்பட்ட புத்தகத்தின்
பக்கங்களாக மறைந்துவிட்டிருந்தது
கண்ணீரில் குலைந்த காதலால்....
எதேட்சையாக கண்களில்
பட்டுத்தொலைக்கும்
உன் பெயரும்...
நாம் சென்ற கடற்கரையின்
மணலில் தான்
இன்னும்
இன்றும் நீ நடைப்போடுகிறாய்
என்ற எண்ணங்களும்...
வரம்பு மீறிவிட்ட வார்த்தைகளும்...
இனி எதுவும், எவையும்
துணைவரப்போவதில்லை....
பிரிவுகள் கொண்டாட
இதயம் பழக்கிவிட்டேன்......
இருந்தபோது விரும்பி,
இன்று வெறுக்கும்
வாலாட்டும் ஜீவன் தானே அது??
.
.
.
.

பிரிவெழுத பிரியமில்லை...
.
.
எனினும்,
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்......
என் நிச்சயிக்கப்பட்டுவிட்ட
சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்...

Friday, November 6, 2009

கால் தடங்கள்...




அதே மாலை நேரம்,
அதே காற்று,
அதே கடல் அலை,
அதே கால் தடங்கள் மணலில்-
என் காதலியினுடையது.

அன்று தொலைவில் கண்ட தடங்கள்
நேற்று அருகில் வந்த தடங்கள்
இன்று என்னை விட்டுச்சென்ற தடங்கள்.




அன்று
உன் காலடி தடங்களாலேயே
உன் வருகையை அறிந்தவன் நான்.
இன்று
பின்தொடர்கிறேன் உன் தடங்களை,
உனக்குத்தெரியாமல்.


சில நாட்கள் காணவில்லை உன் கால் தடங்கள்,-பின்
கண்டடைந்தேன் உன் கால் தடங்களை-நீ
சரணடைந்தவனின் கால் தடத்தோடு.



ஆண்டுகள் பல உருண்டோடின,
மீண்டும் கண்டேன் உன் கால்தடத்தை,
இரு ஜோடி தடத்தின் அருகே
ஒரு ஜோடி குட்டி தடத்தோடு.







நெருங்கினேன் அந்த கால் தடங்களை ஆர்வத்தோடு,
நொறுங்கினேன் குட்டி கால்தடத்தை நீ அழைத்தபோது
நான் உன்னை அழைத்து வந்த பெயரால்?!!


இனி உன் தடங்களை தொடரமாட்டேன் துரோகியே!!!!






பி.கு:-


ஆம் பெற்றோருக்காக என்னைவிட்டுச்சென்று,நான் அவளை அழைத்து வந்த பெயரை தன்மகளுக்கு வைத்து ,என் நினைவில் கணவனுடன் வாழும் அவள் ஒரு
துரோகியே...

புரிதலில்லாக் காதல்

அன்று இளசுகள் நாம். காதலுக்கு அர்த்தம் தெரியுமா நமக்கு? நாம் செய்ததுதான் காதல் என நம்பிக்கொண்டிருந்தோம். நெடுநாள் வாழ்ந்த நம் நட்புக்குள், ஏதோ ஒரு இன்பம், மெல்லிதாகப் படர ஆரம்பித்தது. அது நமக்கும் பிடித்திருந்தது. லேசாகப் படர்ந்ததினை, உரம் போட்டு வளர்க்க நாமொன்றும் அஞ்சவில்லை. நமது நண்பர்கள் கூட அவரவர் பங்குக்கு லேசாக தண்ணீர் தெளித்தனரே! படர்ந்த அந்தக் கொடி, நம் காலைச் சுற்றிய பாம்பு என நமக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் வலுத்த சமயம், பெரிய சச்சரவு ஒன்று நமக்குள்ளே. அது நம் நட்பெனும் போர்வையைக் கிழித்தெறிய வாய்ப்பாய்ப்போனது. மறைமுகமாய் வளந்த அந்தக் கொடியில், முதல் பூ பூத்தது போன்ற உணர்வு. நாளொருமுறை தவறாமல் பார்ப்பதும், குறைந்தது ஒரு மணி நேரம் பேசுவதும் கடமைகளாக்கிக்கொண்டோம். பார்த்தோம், சிரித்தோம், பயணித்தோம், காதலித்தோம், களித்தோம், தோம், தோம், தோம்... பெற்றோரின் கடமை முடிந்து என் கடமை உலகம் திறந்த காலம் அது. புருசலட்சணம் தேடி நான் பிரிந்த நாள் ஞாபகம் இருக்கிறதா உனக்கு? ‘நாளை முதல் எப்படிப் பார்க்காமல் இருக்கப் போகிறேன்’ என்றாய். ‘பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்றதாக நினைத்துக்கொள்’ என்றேன், அதையும் ரசித்தாய் அழுகையுடன். காலங்கள் மாறின. நாம் பேசும் நேரம் குறைந்தது. திடீரென ஒரு நாள் ‘மறந்து விடு’ என்றாய். அதற்கு என்னதான் நீ காரணங்கள் சொன்னாலும், புரிந்தது எனக்கு, நம், புரிதலில்லாக் காதல்.

காதலின் சக்தியை உணர்த்தினாய், ஏமாற்றத்தின் விளைவுகளைக் நீ கண்டிருக்க வாய்ப்பில்லை. பக்க விளைவுகளின் பக்க விளைவுகள், வாந்திகளாய்க் கொட்டின. நல்லவேளை, அப்போது நீ என் அருகில் இல்லை. ’இப்படிச் செய்த நீ நன்றாகவா இருக்கப் போகிறாய்? கடவுள் இருந்தால் உன்னைச் சும்மா விடுவாரா?’ என்றெல்லாம் நீ படப்போகும் துன்பங்கள் மனதில் கரு நிழல்களாக வலம் வந்தன. தொடரும் பயணம், நம்மை, கூடவே வரும் மனிதர்களின் வாழ்க்கையோடு தொய்த்து எடுக்கின்றது, அவர்தம் அனுபவங்களையும் நம்முடன் பிணைத்துக்கொள்கிறது. இன்னும் முழுமையாக உணரவில்லை உலகம், ஆயினும், இன்று எண்ணுகிறேன், நீயும் எங்காவது வாழ்ந்துகொண்டிருப்பாய், என்னைவிட நல்ல கணவனுடன், இன்னொரு உலகத்தை உனக்குக் காட்டும் உன் குழந்தையுடன், பழசை மறந்து உன்னுடன் உறவாடும் உன் குடும்பத்துடன் என்று. வெறுப்பேதும் இல்லை உன்மேல், நம்புகிறேன், இப்போது நீயும் என் நலம்விரும்பியே என்று. ஹ்ம்ம்... காதலில்லாப் புரிதல். நட்புடனே இருந்திருக்கலாம், நம் பிள்ளைகளாவது இருந்திருக்கும், புதுப் பெயர்களுடன்.

Back 2 Top